வியாழன், 15 செப்டம்பர், 2011

கம்பரின் நோக்கில் இராமனின் அழகு

மையோ மரகதமோ
கம்பரே சொற்கள் கிடைக்காமல் தடுமாறிய இடம் உண்டு. இராமன் அழகைக் கம்பர் வருணிக்கிறார். கவிதையால் வடிக்க இயலாத அழகு இராமனின் அழகு. இராமனின் அழகுக்குப் பல உவமைகளை வரிசையாகக் கூறுகிறார். என்றாலும் அந்த அழகை
வார்த்தைக்குள் கொண்டு வரமுடியவில்லை. இறுதியில் ‘ஐயோ’ என்கிறார்.
பாடல் இதோ:


வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோஎனும் இடையாள்ஓடும் இளையான்ஓடும் போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோஇவன் வடிவுஎன்பதோர் அழியாஅழகு உடையான். இராமனின் அழகு


கைகேயி சூழ்ச்சியாலும் வரத்தாலும் இராமன் வனவாசம் (காட்டு வாழ்க்கை) மேற்கொள்கிறான். அயோத்தியை விட்டு நீங்கிக் கானகத்திடையே செல்லும் இராமனின் பேரழகைக்     கம்பர் வருணிக்கிறார். சூரியன் ஒளி இராமனின் உடல் ஒளியினால் மறைகிறது. அப்படிப்பட்ட சோதியை உடைய உடம்பினைக் கொண்டவன் இராமன். இவன் சீதையோடும் இலக்குவனோடும் காட்டின் இடையே நடந்து செல்கிறான். அவன் உடம்பின் அழகு புலவரைக் கவர்கிறது. இராமன் அழகினை மை என்று கூறலாமா என்று நினைக்கிறார் புலவர். இல்லை இல்லை அது மரகதக் கல்லுக்குத்தான் உவமை ஆகும் என்று எண்ணுகிறார். மீண்டும் ஐயம் ஏற்படுகிறது. மையும் இல்லை மரகதக் கல்லும் இல்லை, கடல் போன்ற நீல நிறத்தினை உடையவன் என்கிறார் அதிலும் நிறைவடையாது மழை முகில் போன்ற நிறத்தை உடைய அழகன் என நினைக்கிறார். எந்த உவமையிலும் அவன் அழகைக் கூற முடியவில்லை. மனம் சோர்ந்து ஐயோ இவன் உருவம் தான் அழியாத அழகுடையதாக இருக்கிறது என்று கூறுகிறார்.
ஓசை நயம் தோன்றக் கவி பாடுவதில் கம்பர் வல்லவர்.
அது சரி கம்பருக்கு பௌதிகம்(Physics) தெரியுமா?எந்த பல்கலைகழகத்தில் பட்டம் வாங்கினார்?
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அது இந்த மூன்று வடிவத்தில்தான் அடங்க வேண்டும். அது திரவநிலை,(liquid) திரவமும் திடமும்(semi solid) கலந்த நிலை, மற்றும் திடநிலை.(solid)
கம்பர் ராமனைப் பார்த்தவுடன் அவருக்கு கருமையாண கண்ணுக்கு இடும் அஞ்சனமைபோல் தோன்றியது  மையோ திடதிரவநிலை
சே சே தவறு திடகாத்ரமான வடிவு உடையவன் இவன் ஆகவே மரகதமோ என்று குழப்பம், அதுவும் தவறு மக்களிடம் வற்றாத கங்கைநதிபோல் கருணையுடையவன் ஆகவே கடலோ என்கிறார். பின்னர் வந்திருப்பவன் அந்த பரம்பொருளே  எங்கும் வியாபித்து இருக்கும் மழைகாலத்துகரும் மழைமேகம் போன்றவன் என்று சொன்னாலும் சரியில்லையோ ஏன் இப்படி வார்த்தையோ கிடைக்க மாட்டேன்என்கிறதே ‘ஐயோ” என்று மனம்பதபதைத்து
மையோ  மரதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ  இவன் வடிவுஎன்பதோர் அழியாஅழகு உடையான்

வெள்ளி, 12 மார்ச், 2010

ராமன் எத்தனை ராமனடி 2


இராமாவதாரத்தில் இராமன் வேதபரிபாலனம் செய்வதற்காகத்தான் பூலோகத்திற்கு வந்தான் எனபது சான்றோர்களின் கூற்று. இராமனை ஒவ்வொருவரும் எப்படி அழைப்பார்கள் என்று கூறும்போது முனிவர்கள் இராமனை"" வேதஸே"" என்று அழைப்பார்கள் என்றும் கூறுகிறது.ஆனால் அப்படிப்பட்ட இராமனே வேதத்தில் சொல்லப்பட்ட விதி முறைகளை மீறினான். ஏன் செய்தான் ? எங்கு செய்தான்? பார்க்கலாமா


விஸ்வாமித்திர குருவின் விருப்பப்படி இராமனையும் லக்ஷ்மணனையும் தசரதர் வேள்வியைக் காப்பதற்காக அனுப்பி வைக்கிறார்.அவர்கள் இருவரும் குருவின் சொல்படி காட்டை அடைந்து குருவின் பின் செல்கின்றனர்.வழியில் அழிந்த பாலைவனம் போன்ற தாடகாவனத்தை அடைந்தனர். அப்போது அவர்கள் முன் தாடகை தோன்றி இராமனையும் லக்ஷ்மணனையும் வேல் கொண்டு எறிவேன் என்கிறாள். ராமனும் அவளைப்பார்த்து பெண்ணாக இருக்கிறாளே என்று ஏண்ணி வேத நெறிப்படி பெண்மீது அம்பு எய்யாமல் தவிர்த்து நின்றான்.குரு விஸ்வமித்திர் ராமனைப் பார்த்து ""இக்கொடியாளையும் மாது என எண்ணுவதோ"" ராமா அம்பு எய்து இவளக் கொல் என்றார்."" ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன் இவளைக் கொல்"" என்றார். நன்றாக தர்ம நீதிகளையும் வேதநெறிகளையும் அலசிச் சொல்லுகிறேன் கொல் இவளை.
வேத நெறிகளை மீறுவதா இல்லை குருவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிவதா என்று ஒரு வினாடி சிந்தித்த இராமன் முடிவெடுக்கிறான் அவளைக்கொல்வதென்று.

"" ஐயன் அங்கு அதுகேட்டு அறன் அல்லவும்

எய்தினால் அது செய்க என்று ஏவினால்

மெய்ய நின் உரை வேதம் எனக் கொடு

செய்கை அன்றோ அறம் செயும் ஆறு என்றான்""


சத்திய சீலனே அறமில்லாத செயலைச் செய்யும்படி நேரிட்டு அதை செய்க என்று நீ கட்டளையிட்டால் உன் சொல்லே வேதம் எனக்கொண்டு அதைச் செய்வதன்றோ அறம் செய்யும் முறை என்று கூறி ராமன் அவளை அம்பு எய்து கொன்றான்.

ராமன் வேத வழியிலிருந்து வேறு பட்டது இவ்வறுதான்.
.
காட்டுக்குபோகாதே என்று குரு வசிஷ்டர் கூறியபோது அவரின் வார்த்தையைமீறி காட்டுக்குச் சென்ற அதேராமன் இபொழுது வேதநெறியிலிருந்து வேறுபட்டாலும் குருவின் வார்த்தையே வேதம் என்கிறான். இதைவைத்துத்தான் தியாகராஜர் ""சாதிஞ்சனே ஓ மனஸா"" என்ற பாடலில்"" சமயாநிதி தகு மாடலானிகி"" ராமா நீ சமயத்திற்கு ஏற்ற மாதிரி பேசும் தன்மை உடையவன் என்கிறார் போலும். ஆனால் இங்கு ஆச்சார்ய ஹிருதயத்தை அறிந்து அதன்படி நடக்கவேண்டும் என்ற முறையை நமக்கு கற்றுத்தருகிறார்

சனி, 14 பிப்ரவரி, 2009

ராமன் எத்தனை ராமனடி
சங்கீத உலகத்தில் திரு. தியாகராஜஸ்வாமிகளைத் தெரியாதவர் இருக்கமுடியாது.ராமபிரான்மீதும் சீதாதேவியின்மீதும் அளவற்றபக்திகொண்டு அதன் பயனாக எளிமையான பாடல்களை சுந்தரத்தெலுங்கில் பாடியவர்.நமக்கு அவை பாடல்களாகத் தோன்றினாலும் அவை உண்மையில் அவருக்கும் ராமருக்கும் இடையே நடந்த உரையாடல்கள்.காசியில் மரிப்பவர்களின் காதில் சிவபெருமான் ராம நாமத்தைச் சொல்லி அவர்களை சொர்கத்திற்கு அழைத்துச்செல்வதாக புராணங்கள் கூறுகின்றன.
அதேபோல், நமது தியாகராஜரும் திருவய்யாற்றில் உள்ள அய்யாறப்பன்
என்கிற பிரணதார்த்திஹரன்,அறம்வளர்த்த நாயகி என்கிற தர்மஸம்வர்த்தனி ஆலயத்தில் சிவன் சந்நிதியில் ஒரு கோடி ராமஜபம் செய்து சித்தி பெற்றவர்.
பல வருடங்களக சங்கீதத்தை கேட்டு அதனால் விளைந்த கேள்வி ஞானத்தினால் சில பாடல்களுக்கு விளக்கம் சொல்லாம் என்று முயற்சிக்கிறேன்.


இடை இடையே பத்ராசல ராமதாசர் , அருநாச்சலகவிராயார், அருணகிரியார், போன்றவர்களும் ராமனை எப்படி அனுபவித்தார்கள் என்ற ஒப்பு நோக்குதலையும் அளிக்கப்படும்.
படிப்பவர்கள் தங்களது கருத்துக்களையும்,குறைகளையும், வழக்கம் போல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முழுமுதற்க்கடவுளாம்,விநாயகனை தொழுது, வணங்கி ஆரம்பம்
.

ராகம்; சௌராஷ்டிரம் தாளம்: ஆதி


ஸ்ரீ கணபதினி ஸேவிம்பராரே
ச்ரித மான்வுலாரா (ஸ்ரீ )

வாகதிபதி ஸுபூஜல் ஜேகொனி
பாக நடிம்புசுகொனு வெடலின் (ஸ்ரீ )

பனஸ நாரிகேளாதி ஜம்பூ
பலமுலனாரகிஞ்சி
கனதரம்புகனு மஹிபை பதமுலு
கல்லு கல்லன நுஞ்சி
அனயமுனு ஸ்ரீ ஹரி சரண்யுகமுலனு
ஹிருதயாம்புஜமுன நுஞ்சி
வினயமுனனு த்யாகராஜ வினுதுடு
விவதகதுல தித்தளங்குமனி வெடலின (ஸ்ரீ
)

இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நல்ல மனிதர்களே வரங்களை அள்ளித்தரும் கணபதியை வணங்கிச்செல்ல வாருங்கள்.
வாக்குக்கு அதிபதியான ஸரஸ்வதியின் கணவரான பிரும்மாவினாலும் மற்ற தேவர்களாலும் மிக நேர்த்தியகச் செய்யப்பட்ட பூஜையை ஏற்றுக்கொண்டு அதனால் உண்டாகிய சந்தோஷத்தால் மனமுவந்து தானே அழகாக நடனம் ஆடிக்கொண்டுவரும் நர்த்தன கணபதியை வணங்குவோம் வாருங்கள்

எளியதகவும் எங்கும் சிரமமில்லாமலும் கிடைக்ககூடிய பலாக்காய், தேங்காய்,நாகப்பழம் போன்றவற்றை அமுதமான உணவாகக்கொண்டும்,இந்தப்புண்ணிய பூமியின் மீது கால்களில் உள்ள சலங்கைகள் "ஜல் ஜல்" என்று ஸ்ப்தம் செய்ய நடனமாடிக்கொண்டும் அல்லும் பகலும் அனவரதமும் சரணாகதவத்சலனான மால்மருகனான முருகனின் மாமனாகிய மஹா விஷ்ணுவின் பதாரவிந்தங்களை தன்னுடைய ஹிருதயத்தில் வைத்துக்கொண்டும்,மிக விநயமுள்ள இந்த தியாகராஜனால் வணங்கப்படிகின்றவரும்,விதவிதமான தாளகதிகளுக்கு ஏற்ப "தித்தளாங்கு" என மலர்ந்தமுகத்துடன் ஆடிக்கொண்டு வரும்
அந்த கண்பதியை ஸேவிப்போம் வாருங்கள் நல்ல மனிதர்களே.


இந்தக் கீர்த்தனையை ஸ்வாமிகள் நௌக சரித்தரம் என்ற நாடககீர்த்தனையில்(opera) முதல் கீர்த்தனையாக செய்தார். இதுபோன்ற நாடகங்களுக்கு ஒரு வரைமுறை உண்டு எந்த ராகத்தில் ஆரம்பிக்கப் பட்டதோ அதே ராகத்தில்தான் முடிக்க வேண்டும் . அதே மாதிரி ஸ்வாமிகளும் சௌராஷ்ட்ர ராகத்தில் ஆரம்பித்து கடைசியில் அதே சௌராஷ்ட்ர ராகத்தில் எல்லா கச்சேரிகளிலும் மங்களம் பாடுகிறார்களே "ராஜீவ நயனத்யாகராஜதி வினுதமைன"" முடிக்கிறார்.
தியாகராஜரின் அழைப்பை ஏற்று வாருங்கள்! வணங்குவோம் கணபதியை! .
பாடலைக் கேட்க
இங்கே செல்லவும்

-


http://www.youtube.com/watch?v=i1Kmj-TasOU