வெள்ளி, 12 மார்ச், 2010

ராமன் எத்தனை ராமனடி 2


இராமாவதாரத்தில் இராமன் வேதபரிபாலனம் செய்வதற்காகத்தான் பூலோகத்திற்கு வந்தான் எனபது சான்றோர்களின் கூற்று. இராமனை ஒவ்வொருவரும் எப்படி அழைப்பார்கள் என்று கூறும்போது முனிவர்கள் இராமனை"" வேதஸே"" என்று அழைப்பார்கள் என்றும் கூறுகிறது.ஆனால் அப்படிப்பட்ட இராமனே வேதத்தில் சொல்லப்பட்ட விதி முறைகளை மீறினான். ஏன் செய்தான் ? எங்கு செய்தான்? பார்க்கலாமா


விஸ்வாமித்திர குருவின் விருப்பப்படி இராமனையும் லக்ஷ்மணனையும் தசரதர் வேள்வியைக் காப்பதற்காக அனுப்பி வைக்கிறார்.அவர்கள் இருவரும் குருவின் சொல்படி காட்டை அடைந்து குருவின் பின் செல்கின்றனர்.வழியில் அழிந்த பாலைவனம் போன்ற தாடகாவனத்தை அடைந்தனர். அப்போது அவர்கள் முன் தாடகை தோன்றி இராமனையும் லக்ஷ்மணனையும் வேல் கொண்டு எறிவேன் என்கிறாள். ராமனும் அவளைப்பார்த்து பெண்ணாக இருக்கிறாளே என்று ஏண்ணி வேத நெறிப்படி பெண்மீது அம்பு எய்யாமல் தவிர்த்து நின்றான்.குரு விஸ்வமித்திர் ராமனைப் பார்த்து ""இக்கொடியாளையும் மாது என எண்ணுவதோ"" ராமா அம்பு எய்து இவளக் கொல் என்றார்."" ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன் இவளைக் கொல்"" என்றார். நன்றாக தர்ம நீதிகளையும் வேதநெறிகளையும் அலசிச் சொல்லுகிறேன் கொல் இவளை.
வேத நெறிகளை மீறுவதா இல்லை குருவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிவதா என்று ஒரு வினாடி சிந்தித்த இராமன் முடிவெடுக்கிறான் அவளைக்கொல்வதென்று.

"" ஐயன் அங்கு அதுகேட்டு அறன் அல்லவும்

எய்தினால் அது செய்க என்று ஏவினால்

மெய்ய நின் உரை வேதம் எனக் கொடு

செய்கை அன்றோ அறம் செயும் ஆறு என்றான்""


சத்திய சீலனே அறமில்லாத செயலைச் செய்யும்படி நேரிட்டு அதை செய்க என்று நீ கட்டளையிட்டால் உன் சொல்லே வேதம் எனக்கொண்டு அதைச் செய்வதன்றோ அறம் செய்யும் முறை என்று கூறி ராமன் அவளை அம்பு எய்து கொன்றான்.

ராமன் வேத வழியிலிருந்து வேறு பட்டது இவ்வறுதான்.
.
காட்டுக்குபோகாதே என்று குரு வசிஷ்டர் கூறியபோது அவரின் வார்த்தையைமீறி காட்டுக்குச் சென்ற அதேராமன் இபொழுது வேதநெறியிலிருந்து வேறுபட்டாலும் குருவின் வார்த்தையே வேதம் என்கிறான். இதைவைத்துத்தான் தியாகராஜர் ""சாதிஞ்சனே ஓ மனஸா"" என்ற பாடலில்"" சமயாநிதி தகு மாடலானிகி"" ராமா நீ சமயத்திற்கு ஏற்ற மாதிரி பேசும் தன்மை உடையவன் என்கிறார் போலும். ஆனால் இங்கு ஆச்சார்ய ஹிருதயத்தை அறிந்து அதன்படி நடக்கவேண்டும் என்ற முறையை நமக்கு கற்றுத்தருகிறார்