வியாழன், 15 செப்டம்பர், 2011

கம்பரின் நோக்கில் இராமனின் அழகு

மையோ மரகதமோ
கம்பரே சொற்கள் கிடைக்காமல் தடுமாறிய இடம் உண்டு. இராமன் அழகைக் கம்பர் வருணிக்கிறார். கவிதையால் வடிக்க இயலாத அழகு இராமனின் அழகு. இராமனின் அழகுக்குப் பல உவமைகளை வரிசையாகக் கூறுகிறார். என்றாலும் அந்த அழகை
வார்த்தைக்குள் கொண்டு வரமுடியவில்லை. இறுதியில் ‘ஐயோ’ என்கிறார்.
பாடல் இதோ:


வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோஎனும் இடையாள்ஓடும் இளையான்ஓடும் போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோஇவன் வடிவுஎன்பதோர் அழியாஅழகு உடையான்.



 இராமனின் அழகு


கைகேயி சூழ்ச்சியாலும் வரத்தாலும் இராமன் வனவாசம் (காட்டு வாழ்க்கை) மேற்கொள்கிறான். அயோத்தியை விட்டு நீங்கிக் கானகத்திடையே செல்லும் இராமனின் பேரழகைக்     கம்பர் வருணிக்கிறார். சூரியன் ஒளி இராமனின் உடல் ஒளியினால் மறைகிறது. அப்படிப்பட்ட சோதியை உடைய உடம்பினைக் கொண்டவன் இராமன். இவன் சீதையோடும் இலக்குவனோடும் காட்டின் இடையே நடந்து செல்கிறான். அவன் உடம்பின் அழகு புலவரைக் கவர்கிறது. இராமன் அழகினை மை என்று கூறலாமா என்று நினைக்கிறார் புலவர். இல்லை இல்லை அது மரகதக் கல்லுக்குத்தான் உவமை ஆகும் என்று எண்ணுகிறார். மீண்டும் ஐயம் ஏற்படுகிறது. மையும் இல்லை மரகதக் கல்லும் இல்லை, கடல் போன்ற நீல நிறத்தினை உடையவன் என்கிறார் அதிலும் நிறைவடையாது மழை முகில் போன்ற நிறத்தை உடைய அழகன் என நினைக்கிறார். எந்த உவமையிலும் அவன் அழகைக் கூற முடியவில்லை. மனம் சோர்ந்து ஐயோ இவன் உருவம் தான் அழியாத அழகுடையதாக இருக்கிறது என்று கூறுகிறார்.
ஓசை நயம் தோன்றக் கவி பாடுவதில் கம்பர் வல்லவர்.
அது சரி கம்பருக்கு பௌதிகம்(Physics) தெரியுமா?எந்த பல்கலைகழகத்தில் பட்டம் வாங்கினார்?
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அது இந்த மூன்று வடிவத்தில்தான் அடங்க வேண்டும். அது திரவநிலை,(liquid) திரவமும் திடமும்(semi solid) கலந்த நிலை, மற்றும் திடநிலை.(solid)
கம்பர் ராமனைப் பார்த்தவுடன் அவருக்கு கருமையாண கண்ணுக்கு இடும் அஞ்சனமைபோல் தோன்றியது  மையோ திடதிரவநிலை
சே சே தவறு திடகாத்ரமான வடிவு உடையவன் இவன் ஆகவே மரகதமோ என்று குழப்பம், அதுவும் தவறு மக்களிடம் வற்றாத கங்கைநதிபோல் கருணையுடையவன் ஆகவே கடலோ என்கிறார். பின்னர் வந்திருப்பவன் அந்த பரம்பொருளே  எங்கும் வியாபித்து இருக்கும் மழைகாலத்துகரும் மழைமேகம் போன்றவன் என்று சொன்னாலும் சரியில்லையோ ஏன் இப்படி வார்த்தையோ கிடைக்க மாட்டேன்என்கிறதே ‘ஐயோ” என்று மனம்பதபதைத்து
மையோ  மரதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ  இவன் வடிவுஎன்பதோர் அழியாஅழகு உடையான்